செவ்வாய், 28 ஜூன், 2011

இந்திய மருத்துவமும் தாவரங்களும்

அமெரிக்காவின் தலைநகர் நியூ யார்க்கில் அமைந்துள்ள "Excelsior College" -இல் இயற்கை அறிவியல் துரையின் இயக்குனராக உள்ள டாக்டர். உஷா பழனிசுவாமி அவர்கள் இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் உபயோகித்துள்ள தாவரங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பினை American Society for Horticultural Science என்ற அமைப்பிற்காக தொகுத்துள்ளார். அதன் காணொளி கீழே...



இந்த தொகுப்பிலிருந்து ஒரு முக்கியமான தகவல் நமக்கு கிடைக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளின் அளவு வெறும் 2.5%. ஆனால் சீனா 15% ஏற்றுமதி செய்கிறது. ஒரு பெரிய வியாபாரத்தின்அழைப்பாகவே இதை நான் கருதுகிறேன். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் மூலிகைகளை வெறுமனே செடிகளாக ஏற்றுமதி செய்வதா? அல்லது மதிப்பு கூட்டி பின்பு அந்த மதிப்பு கூட்டிய பொருளுக்கு உரிய காப்புரிமை பெற்று பின்பு ஏற்றுமதி செய்வதா?

எதுவானாலும் இயற்கை மருத்துவம் எதிர்கால பெருவியாபாரமாக ஆகப்போவது உறுதி.

Courtesy: http://www.ashs.org/db/horttalks/detail.lasso?id=899

வியாழன், 19 மே, 2011

வாத்தியார் பிள்ளை மக்கு!

நம் வீட்டின் அருகில் ஒரு வாத்தியார் குடியிருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க முடியும். "நான் ஒரு ஸ்கூல்ல வாத்தியார். ஆனா என் பையன் நீ! இப்பிடி மக்கா இருக்கியேடா!" என்று. (வாத்தியார் பேச்சிலரா இருந்தா கூடவா? என்று குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது!)

பிள்ளை பெற்றுக்கொள்வதில் இருந்து அவனை /அவளை டீன் ஏஜ் வரை வளர்ப்பது என்ற கடமையை (சிவனே/பெருமாளே/... என்று) ஏற்றுக்கொண்டு இந்தியத் தாய்மார்களும் தந்தைமார்களும் கஷ்டப்படுவதை நாள்தோறும் பார்க்கிறோம்!

ஒரு பிள்ளை பெற்றவன் என்ற முறையில் என்னை நானே சோதித்து பார்த்து கண்ட உண்மை ஒன்று, இல்லை இல்லை, என் கேள்விக்கு நானே கண்ட பதில். அது என்ன கேள்வி? சிறு வயதில் நான் செய்த சில தவறுகளுக்காக (தப்புகள் இல்லை) என் அப்பா என்னை தண்டிக்கும்போது, நான் அப்படி என்ன செய்யக்கூடாததை செய்துவிட்டேன்? என்ற கேள்வி மனதில் எழும், விழும். மறுபடி என்றாவது எழும். இந்தக் கேள்விக்கு விடை சொல்ல ஒரு அப்பரும் (அப்பனும்) தயாராய் இல்லை (நானே அப்பவாகிதான் இதை கண்டுபிடிக்கணும்னு இருக்கு!)

நான் வளரும்போது எண்ணங்களால் உந்தப்பட்டு என்னென்ன செய்தேனோ அதையே என் மகனும் செய்யும் போது என் தந்தையைப்போல் எனக்குக் கோபம் வரவில்லை. மாறாக, என் கேள்விகளுக்கு விடை தெரியும் காலம் வந்துவிட்டதாய் உணர்ந்தேன். என் தாய் கற்றுக்கொடுத்த நிதானம்தான் அதற்கு காரணம்.

தன்னைப்பற்றி அறிந்துகொள்ள கேட்கப்படும் நிறைய கேள்விகளுக்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்ற உபரி உண்மையும் எனக்கு அப்போது தெளிவாகியது.

ஒரு உயிர் உருவாவதிலிருந்தே அதன் குணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் (genes) என்று சொல்வார்களே, அது உருவாகும் நிமிடம், உருவாக்குபவர் என்ன மனநிலையில்/உடல்நிலையில் உள்ளார் என்பதை பொறுத்து அமையும்.

'முதல் இரவு' நடப்பதற்காக செய்யும் சாங்கியங்களில் (இன்று நடப்பதை சொல்லவில்லை, எவ்வாறு நடக்க வேண்டும் என்று எழுதிவைக்கப்பட்டதோ (யாரால்!), அவ்வாறான சாங்கியங்களில்) அதற்கான விளக்கங்களை நாம் அறிய முடியும்.

ஒரு மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் தயார் செய்யும் முறையில் மஞ்சள், சந்தானம், ஜவ்வாது, பன்னீர், சில பூக்கள், மற்றும் பல இயற்கை பொருட்களை வைத்து அலங்கரித்தப்பின்தான் அந்த முக்கியமான (!) வேலையை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் அரும்பாடு பட்டாலும் ஆரம்பத்திலிருந்தே நடப்பதெல்லாம் ஏடாகூடம்தான்.

இக்கணத்தில் எனக்கு தோன்றுவது "சொல்லித்தெரிவதுதான் மன்மதக்கலை". "காமசூத்ரா" எனும் இந்தியப்படம் ஒன்று! பார்த்தப்பின்தான் தெரிந்தது நம் நாட்டு கலாச்சாரம் எந்த அளவிற்கு நுண்ணியது என்று. இந்திய இலக்கியங்களில் பலவற்றிலும், குறிப்பாக அகநானூறில் சொல்லப்பட்ட கருத்துகளில் ஏராளமான அக சமாச்சாரங்கள் ஒளிந்துள்ளன.

குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வதிலிருந்து அதைப்பெற்றுக்கொண்டு பேணி(!) வளர்த்து சமுதாயத்திற்கு ஒரு நல்ல பிள்ளையை உருவாகுவது இன்றைய அவசரகால வாழ்க்கை முறையில் காலவதியாகிவிட்டது.

ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததிலிருந்து தன்னுடைய தேடலை/கற்றலை ஆரம்பித்துவிடுகிறது. எங்கிருந்து? அதன் கண்முன் நடக்கும் அத்தனையும் பார்த்து, காதார கேட்கும் எல்லாவற்றிலுமிருந்து!

பிறந்தவுடன் அனேக(!) குழந்தைகளுக்கு வீடுதான் உலகம். அந்த உலகத்தில் ஆரம்பமாகும் கல்வி தொடர்ந்து தான் சந்திக்கின்ற எல்லா மனிதர்களின் ஊடே பயணித்து தன் வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்கிறது. பெற்றோர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், என்ன படிப்பு படித்திருந்தாலும், எந்த அந்தஸ்தில் இருந்தாலும் தன குழந்தையின் முதல் கல்விக்கு அவர்களே பொறுப்பு.

வாத்தியார் பள்ளியில் மட்டும் வாத்தியாராய் (!) இருக்காமல் வீட்டிலும் அதே நினைப்போடு வாத்தியார்(?) தொழில் செய்வதனால்தான் அவர் பிள்ளை மக்காய் வளர்கிறது. கண்டிப்பு என்ற சொல்லிற்கு இன்னும் நம் பெற்றோர்கள்/ஆசிரியர்கள் சரியான அர்த்தத்தையோ விளக்கத்தையோ புரிந்துகொள்ளவில்லை.

சரியான கல்வி மட்டுமே ஒருவனின்/ஒருத்தியின் நிஜ வாழ்க்கை (அதாவது தாமே முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வாழ்வது) எப்படி அமையும் என்பதை தீர்மானிக்கிறது.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். பிள்ளைகளை, உலகம் என்னவென்று அறிந்துகொள்ளச்செய்யுங்கள். அதற்கு முன்னால் நீங்கள் யார் என்பதை சிறிதளவேனும் அறிந்துகொள்ளுங்கள். உங்களின் பிம்பம்தான் பிள்ளைகள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாம் சரியான பாதையில் நடைபோட்டால் நம் பின்னே வரும் பிள்ளைகள் சரியான பாதையில்தான் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.

சனி, 8 ஜனவரி, 2011