செவ்வாய், 30 நவம்பர், 2010

உடலின் வயதை மறந்து மனதின் வயதை கணக்கிடு!

உடலின் வயதை மறந்து மனதின் வயதை கணக்கிடு!

எதோ தத்துவம் சொலராப்பல இருக்குது.

அது ஒன்னியும் இல்ல வாத்தியாரே!

அல்லாரும் பொறந்தநாள் கொண்டார்ரங்க. பொறந்த நாளே தெரியாதவன் இன்னா நாள் கொண்டாடுவான்? அப்போ அவன் வயசு இன்னான்னு ஆருக்காச்சும் தெரியுமா?

ஆனா மனசு கீதே, அதுக்கு இன்னா வயசாவுதுன்னு சுளுவா கண்டுக்கலாம். ஒவ்வொரு மனசனும் அவன் வாழ்ற எடத்துல ஒரு பொறுப்போட நடந்துகிட்டான்னா அவன சாதாரண மனுசன்னு சொல்லலாம். கொஞ்சம் சின்ன புள்ள மாதிரி பண்ணான்னா, அவன லூசுன்னு சொல்லிக்கலாம். அதே பிரியாத மாதிரியே பேசினான்ன, நெறையா படிச்சிட்டு ஏதேதோ பேசறான்னு சொல்லலாம்.

சொல்றது ஒன்னு செய்யறது ஒண்ணுன்னு இருந்தா, பெரிய மனுசன்னு சொல்லலாம். எதையுமே சொல்லாம வெறுமனே அவன்பாட்டுக்கு எதோ பண்ணிகினு இருன்தான்னா, இன்னா சொல்றது.. நமக்கு தெரியிலியேபா?

ஞானின்னு சொல்லலாமா?

இப்பிடி மனசுக்கு வயச நாம கண்டுக்கிறது ரொம்ப ஈசிதான? இன்னா சொல்ற?

திங்கள், 29 நவம்பர், 2010

நல்லகண்ணு பரமசிவம் - 1

"என்னதான் உலகமோ? என்ன பண்ணினாலும் குத்தம் கண்டுபுடிக்குது!" என்று புலம்பிக்கொண்டே ஆபீஸ் உள்ளே நுழைந்தார் நல்லகண்ணு.

வாய்யா நல்ல்ல்ல கண்ணு! ஏன் வரும்போதே புலம்பல்..வீட்டுக்காரம்மா காலையிலேயே நல்ல்ல்ல ஊத்தப்பம் குடுத்துச்சா....என்று நக்கலாக கேட்டார் பரமசிவம்.

போய்யா...உனக்கு எப்பவுமே நக்கல்தான். ஆனா நீ மட்டும் எப்பிடி சந்தோசமா இருக்கே. உனக்கும் நாலு பொண்ணு இருக்குது. நாலும் படிக்குது..கல்யாணம் பண்ணனும்..பொண்ண
பெத்தவன் பாடு சொல்லி தெரியவேண்டியதில்ல...
இது பத்தாதுன்னு கூட பொறந்த 3 தம்பி 2 தங்கச்சிக்கு கல்யாணம் வேற பண்ணிட்ட..உனக்கு சம்பளமும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல... எல்லாம் கடவுள் விட்ட வழின்னு சாக்கு சொல்லாம, நீ சந்தோசமா இருக்கிற ரகசியத்த கொஞ்சம் சொல்லுப்பா..என்று ஒரு பெரிய விடைக்கான கேள்வியை சாதாரனமாய் கேட்டார் நல்லகண்ணு.

"நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி நீ ஏன் பொலம்பிகிட்டே வந்தேன்னு மொதல்ல சொல்லு" என்றார் பரமசிவம்.

நான் சொல்லறத என்பசங்க கேக்க மாட்றாங்க. ஆனா யாரோ ஒரு பஸ் கண்டக்டர் சொல்றத நான் கேக்கணுமாம்?

ரொம்ப இழுக்காம விஷயத்தை சொல்லுய்யா?

நேத்து பஸ்சுல வரும்போது நம்ம ஆபீஸ் பைல்ஸ் எல்லாத்தையும் எடுத்துகிட்டு கொஞ்சம் மெதுவா ஏறினேன்.."வயசான காலத்துல யாருக்கு சொத்து சேக்க இப்பிடி அலையிற?" ன்னு கேக்குறான்.

இன்னைக்கு காலையில் வரும்போது "சில்லறை இல்லாம பஸ்ல எதுக்கு வர?
" ன்னு சத்தம் போடுறான். நான் என்ன பண்ணினாலும் குத்தமாவே பாக்குறான். என்ன பண்றதுனே தெரியல!

பரமசிவம் தன்னுடைய குரலை சற்று சரிபடுத்திக்கொண்டு, பதில் சொல்லஆரம்பித்தார்.

ஒரு சூழ்நிலைக்குள்ள யோசிச்சுதான் நாம எந்த விஷயத்தையும் புரிஞ்சுக்கவோ இல்ல முடிவு எடுக்கவோ செய்யுறோம். சூழ்நிலை தாண்டி சிலர் யோசிச்சு சொல்லுவாங்க. அவங்க அதிபுத்திசாலிங்க. நமக்கு அதெல்லாம் வேணாம். ஒரு விஷயத்தை செய்யரதுக்கோ இல்ல ஒரு பிரச்சினைய தீக்கரதுக்கோ ரெண்டு மூணு வழி இருக்கும். மத்தவங்கல பாதிக்காம எத செய்ய முடியுமோ அதை நாம செய்யணும். சில நேரங்கள்ல அது கொஞ்சம் சிரமமான வேலையா இருந்தாலும் பால்மாறாம செய்யணும். அப்பிடி செய்யும்போது நமக்கு ஒரு வேலைய நல்லபடியா முடிச்சுட்டோங்கர திருப்தி இருக்கும். மனசுல திருப்தி இருந்தா நக்கல் இல்லாம வேற என்ன வரும்...

நல்லகண்ணு சற்றே தெளிந்தவராய் அவரோட சீட்டுக்கு போனார்.

(நக்கல் என்பதை தமாஷ் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளவும்)

சனி, 2 அக்டோபர், 2010

சில புரிதல்கள்

நேற்று என் நண்பனோடு நான் பேசிக்கொண்டிருக்கும்போது தோன்றிய ஒரு விஷயம். (கவிதை வடிவில் - ஒரு சிறு முயற்சி - பிழை இருந்தால் பின்னூட்டமிடவும்)

என் மொழி
என் மொழியே அல்ல
எவர் மொழியோ

என் மொழி
உன் மொழியாகலாம்
உன் மொழி
என் மொழியாகலாம்!

எனினும்,
என் வழி என்றுமே
என் வழிதான்.

அதிகபட்சமாக சினிமாத் துறையில் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டிருப்போம். "என் கதையை திருடிவிட்டார்கள். என் கற்பனை எனக்கு மட்டுமே சொந்தமானது" என்று.

நாம் பிறக்கும்போது சில அடிப்படை செயல்களான உண்பது, அழுவது இன்ன பிற போன்றவற்றிற்கான புரிதல்கள் மூளையில் பதியப்பட்டிருக்கும் (அனாடமி). ஆனால் நாம் சிந்திக்கும் எல்லாமே நாமே சுயமாக செய்வதாக நினைத்திருந்தால் அங்கே ஒரு பிழை ஏற்படுகிறது. நம் சிந்தனையில் வெளிப்படும் விஷயங்கள், இந்த சமுதாயம் தந்தது. நம்மை சுற்றி உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உயிரற்றவைகளுக்கும் அந்தச் சிந்தனையில் பங்கு இருக்கிறது.

சிந்திப்பதன் மூலம் செயல் உருவாகிறது. ஒரு செயல் மற்றொரு சிந்தனைக்கோ செயலுக்கோ விதையாக அமைகிறது. Stimuli and Response என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

சரி இன்னாதான் விஷயம், என்று கேட்பவர்களுக்கு, ஒரு பதில். ஏற்கெனெவே சொன்ன உதாரனத்தை வைத்தே சொல்கிறேன். ஒருவருடைய கதை மற்றொருவருடைய கதையாகலாம். ஆனால், திரைக்கதை ஒருவருக்கே சொந்தம் அல்லது ஒரு குழுவுக்கே சொந்தம். இதை யாரும் மறுக்க முடியாது.

மறுப்பவர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மனம் ஒரு தோட்டம்

முதலில் கொஞ்சம் தாவரங்களின் வரலாறு. தாவரங்களின் வகைகள் சுமார் 4 லட்சம். அத்தனையும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் பெருவாரியான பிரிவினைகளை நாம் அறிவியல் பாடங்கள் மூலம் அறிந்துள்ளோம். மலர்ச்செடிகள், காய் மற்றும் கனி தரும் செடிகள், பலனே அல்லாத செடிகள். இன்னொரு வகை உள்ளது. அது உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் சில தாவரங்கள், முட்செடி போன்று.

முட்செடிகளை வெட்டி எரி(றி)யுங்கள் என்று ஒரு மின்னஞ்சலை நான் பார்க்க நேர்ந்தது. ஊரெல்லாம் உள்ள முட்செடிகளை வெட்டுவது மிக சுலபம். ஒரு சின்ன அறிவிப்பு போதும். ஆனால் நம் மனம் என்னும் தோட்டத்தில் பல முட்செடிகளை வளர்த்து வருகிறோம், நமக்கே தெரியாமல். தெரியாமல் வளர்த்தது நம் தவறில்லை என்றாலும், முற்றிலும் வளர்ந்து நம்மையே அழிக்கும் வரை நாம் அதை அறியாமலே இருப்பதுதான் மிகக்கொடியது.

அந்த முட்கள் வளரும்போது நம்மிடம் சில மாற்றங்கள் தென்படும். கோபம், வெறுப்பு, பொறாமை, தலைவலி, வருத்தம், சொந்தம் மற்றும் நட்பில் விரிசல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

எல்லாம் சேர்ந்து தென்படுமேயானால் உங்களை யார் காப்பாற்றுவது?

மனத்தோட்டத்தில் முட்களை வெட்டிவிட்டு மலர்ச்செடிகளை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?

வற்புறுத்தியோ அதிகாரம் செய்தோ எதையும் சாதிக்க முடியாது. வேறு எந்த குறுக்கு வழியிலும் முடியாது. இறைநம்பிக்கையும் வழிபாடும் மட்டுமே நல்வாழ்க்கைக்கு வழி செய்யும். ஆன்மிகம் என்பது இவ்வாறு உருவானதுதான்.
வழிபாடும் தியானமும் முட்செடிகளை களைந்து மலர்ச்செடிகளை வளர்க்க உதவும்.
இன்று மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை கற்றுத்தரப்பட்டிருக்கும். வழிபடுங்கள். வாழுங்கள்.

திங்கள், 19 ஜூலை, 2010

தமிழ் விக்கிபீடியா காணவில்லை!

தமிழ் விக்கிபீடியா காணவில்லை! பதற வேண்டாம். கீழே நீங்கள் காண்பது விக்கிபீடியாவில் மொழிவாரியாக இருக்கும் சொற்களின் எண்ணிக்கை (பில்லியனில்), ஆங்கிலத்தை பொதுவாக வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட புள்ளிவிவரம் (விகிதத்தில்). இதில் தமிழுக்கு எண்ணிக்கை 0.2 விட குறைவாக உள்ளது. பதிவர்கள் மனது வைத்தால், இந்த கட்டற்ற கலைக்களைஞ்சியத்தை நிரப்ப, எவ்வளவு நேரம் ஆகும். இங்கு அங்கீகரிக்கப்படும் கட்டுரைகள் உலகெல்லாம் உள்ள தமிழர்கள், தமிழ் தெரிந்தவர்கள் எல்லோரும் தலைமுறைகளைத்தாண்டி பயன்பெறுவர் என்பதில் ஐயமில்லை.




சில பின்னூட்டங்களை நான் படிக்கும்போது மிகுந்த தகவல்கள் கிடைக்கும். ஆனால் அதை ஒன்று திரட்டி ஒரு கட்டுரையாக எழுதி விக்கியில் பதிவிட எல்லோருக்கும் எதுவோ தடுக்கிறது. நண்பர்கள் தங்களிடம் இருக்கும் தகவல்களை எனக்கு அனுப்பினால், அதை தமிழ்படுத்தி விக்கியில் ஏற்றலாம் என்ற எண்ணம் தோன்றியது.

விக்கிபீடியாவில் தமிழ் மொழியில் வரையறை இன்றி நாம் கட்டுரைகளை சேர்க்க முடியும். எனவே எனக்கு உங்களிடம் இருக்கும் கட்டுரைகளையோ தகவல்களையோ அனுப்பிவைக்க என்னுடைய மின்னஞ்சல் முகவரி (udayakumar.sree@gmail.com). உங்களிடம் பேப்பரில் உள்ளதென்றால், எனக்கு கூரியரில் அனுப்பமுடிந்தால் அனுப்புங்கள்.

புதிய எண்:23, Dr. ராதாகிருஷ்ணன் தெரு,
கூடுவாஞ்சேரி - 603 202.

புதன், 9 ஜூன், 2010

இந்திய சென்சஸ் 2011, ஒரு விழிப்புணர்வு கட்டுரை!

இந்திய நாட்டில் நடப்பு ஆண்டில் ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு(Census) நடத்தப்போகிறார்கள். இதில் பல்வேறு பிரிவுகளில் கணக்கெடுப்பு நடைபெறும்.

நாம் கவனிக்க வேண்டிய முக்கியப் பிரிவு என்னவென்றால், சாதி வாரியாக எடுக்கும் கணக்கு. இது உண்மையிலையே மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட எந்த அரசும் செய்யாது. நிஜமான நோக்கம் என்னவென்றால், சாதி வாரியாக, தொகுதி வாரியாக ஓட்டுவங்கிகளை அடையாளம் காண நடக்கும் சதி. இது வெளிப்படையாக எல்லோருக்கும் (அநேகமாக!) புலப்படும்.

நீண்ட கால அடிப்படையில் அரசாங்கம் இதை வைத்து என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் சமீபத்திய சாதனைகளை (!!) உற்று நோக்கும் வாசகர்களுக்கு இன்னும் நிறைய எதிர்வினைகளை ஊகிக்க முடியும். முக்கியமாக அன்னை (!?!) அவர்களின் கடந்த கால வரலாறு மற்றும் அசைவுகளை தெரிந்தர்வர்களின் ஊகம் இன்னும் மோசமானதாகவே இருக்கும்.

இந்த கருத்துக்கு ஆதாரங்கள் சில:
  1. 80 வருடங்களுக்குப்பின் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடைபெற எந்த ஞாயமான காரணமும் அரசிடம் இல்லை.
  2. தொடர்புடைய சுட்டி 1
  3. தொடர்புடைய சுட்டி 2
  4. இந்தியா போன்ற சமய சார்பற்ற (Secular) நாடுகளில், ஒருவர் மதம் மாறினாலும், சாதி அடையாளம் மாறாமல்தான் இருக்கிறது. எனவே சாதி என்பது அழிக்க முடியாத அடையாளம் என்று நம் நாட்டு அரசியல் கட்சிகள் உணர்ந்து வெகுகாலமாகிறது. அதை இன்னும் பலப்படுத்தி தற்போது இருக்கும் சாதிவாரியான கணக்கை மேலும் துல்லியமாக அறிய அரசு எடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே தோன்றுகிறது.
இதைப் படித்த அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். கணக்கெடுப்பு அதிகாரி உங்கள் வீட்டிற்கு வந்து கணக்கெடுக்கும்போது சாதி என்ன என்ற கேள்விக்கு உங்கள் உண்மையான சாதியின் பெயரை சொல்லாமல் வேறு என்ன சொன்னாலும் சரி, அது நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு (?? சற்றே) ஆரோக்யமான சமுதாயத்தை விட்டுச் செல்வதற்கு சமம்.

தேசிய உணர்வுடன்,
உதயகுமார்.

செவ்வாய், 25 மே, 2010

தோழனா? தோழியா?

சமீபத்தில் ஒரு உளவியல் ரீதியான பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. என்னுடைய நெருங்கிய தோழிக்கு திருமணம் நடந்து முதல் நாள் இரவு விசேஷத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

சிறிய முன்குறிப்பு: என் தோழி வீட்டில் கடைக்குட்டி. அவளுக்கு இரண்டு சகோதரிகள் (இரட்டையர்). அப்பா செக்யூரிட்டி உத்தியோகம் பார்ப்பவர். அம்மா சுய உதவிக்குழு ஒன்றில் இணைந்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

சிறிது நேரத்தில் என் தோழி (இனி ராதா என்று வைத்துக்கொள்வோம், ராதாவின் அம்மா சீதா) கண்ணீர் மல்க வார்த்தைகள் ஏதும் இன்றி சீதாவின் பக்கத்தில் நின்றாள். சீதாவுக்கு தூக்கி வாரி போட்டது. இந்த நேரம் பார்த்து இவள் இப்படி செய்கிறாளே, மாப்பிள்ளை என்ன நினைப்பார் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே ராதாவின் அப்பாவிடம் சொன்னார். இருவரும் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர்.

பெட்ரூமைவிட்டு வெளியே எட்டிப்பார்த்த மாப்பிள்ளை நடப்பது என்ன என்று ஒருவாறு கணக்கு போட்டு, அமைதியாய் வெளியே வந்து ராதாவின் அப்பாவிடம் இன்றைக்கு எதுவும் வேண்டாம் என்றும், வேறு ஒரு நல்ல நாள் பார்க்கச் சொல்லிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார்.

பிரச்சினை இதோடு முடிந்து விடுமா?

சீதா ராதாவை சமாதானப்படுத்தி அனுப்பிவைக்க முயற்சி செய்தார். பலனில்லை. பயம் அப்பிக்கொண்ட முகத்தோடு ராதாவின் மனநிலை சரியாக இல்லை என்பது தெரிய வந்தது.

பொதுவாக, நாம் கேள்விப்படும் விஷயம் என்னவென்றால் திருமணம் மற்றும் தாம்பத்யம் பற்றிய பயம் எல்லோருக்கும் இருக்கும் அனாலும், அந்த தருணம் வரும்போது ஒருவகையாக சமாளித்து விடுவார்கள். அனால் ராதாவின் கதை முற்றிலும் வேறு!

விஷயத்தை நான் ஆராய்ந்ததில், எனக்கு புலப்பட்ட விஷயம், ராதாவுக்கு நல்ல தோழி ஒருத்தி இல்லை என்பது.

நம் சமுதாயத்தில் திருமணம் மற்றும் தாம்பத்யம் பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்ள ஆணுக்கு கிடைக்கும் வாய்ப்பை விட பெண்ணுக்கு கிடைப்பது குறைவே. அதேபோல் இந்த விஷயத்தை ஒரு பெண்ணிடம் அவளின் தோழன் வெளிப்படையாய் பேசும் நிலை இல்லை. அம்மாதான் தோழியாக இருந்து இவ்விஷயங்களை பற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் குடும்ப சூழ்நிலை அவர்கள் பேசும் வாய்ப்பை தடுத்து விட்டது!

தவறு யார்மீதும் இல்லை. என்றாலும் பிரச்சினைக்கு பொறுப்பேற்று யார் இதை தீர்த்து வைப்பது.

என் தோழிக்கு உங்களால் முடிந்த அறிவுரை அல்லது ஆலோசனையை எதிர்பார்த்து இந்த பதிவு!... இதுபோன்ற மற்ற தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் இது காணிக்கை!

அன்புடன்,
உதயகுமார்.

வெள்ளி, 14 மே, 2010

ஏர்போர்ட் நல்ல ஏர்போர்ட்!!!

நான் கூடுவாஞ்சேரியில் வசிப்பவன். மகேந்திரா சிடியில் வேலை. சில நாட்கள்முன்புதான் ஏர்போர்ட் பக்கம் செல்ல வேண்டி இருந்தது. ஏர்போர்ட் மேம்பாலம் மிகநேர்த்தியாக கட்டபட்டிருந்தது. ஆனால் மேம்பாலத்தின் கீழ்புறம், ஆட்டோக்கள்நிற்கும் இடம் அருகில் சென்றவுடன் என் பிரமிப்பு காற்று போன பலூன் போல்ஆனது. ஏன் என்று சிலர் யூகித்து இருப்பீர்கள். ஆட்டோ டிரைவர்கள் (இயற்கை) அவசரம் காரணமாக அங்கே ஓர் நீர்த்தொட்டி உருவாக்கி அந்த சுற்றுபுறத்தை மனம் வீச செய்துள்ளனர்.

பல வெளிநாடுகளில் இருந்து வரும் எல்லோரும் பார்க்கும் இடத்தில் இவ்வாறு செய்கிறோமே என்ற உணர்வே இல்லாமல் இப்படி செய்து விட்டார்கள். ஆனால் அவர்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன். AAI என்னும் இந்திய ஏர்போர்ட் அதாரிட்டி அதிகாரிகளாவது அவர்களுக்கு முறையான ஒரு இடத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்.

கேள்வி என்னிடம்! விடை யாரிடம்!!