ஜெயமோகன்அவர்கள் சொல்லவருவது யாதெனில்!
சீண்டுவது
பற்றி…
இத்தகைய விவாதங்களைப்பற்றி பொதுவாகவே ஒரு புகார் சொல்லப்படுகிறது. இதிலுள்ள
சீண்டும் அம்சம், கவன ஈர்ப்பு அம்சம் பற்றி. இதைப்பற்றி
நான் மீண்டும் மீண்டும் பதில்சொல்லியிருக்கிறேன். இப்போது
மீண்டும்.
உலக இலக்கிய வரலற்றில் தன் சமகாலச் சிந்தனைச் சூழலை சீண்டாத, விவாதத்துக்கு
இழுக்காத முக்கியமான படைப்பாளிகள் அனேகமாக எவரும் கிடையாது. இலக்கியப்படைப்பாளிகள்
அதனூடாக எப்போதுமே சர்ச்சைக்கு காரணமாகிறார்கள். தல்ஸ்தோய்
முதல் லோஸா வரை, புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரை இதுதான் வரலாறு. இதில் சிறைசென்றவர்கள்
உண்டு- டி.எச்.லாரன்ஸ் போல. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள்
உண்டு- லூகி பிரண்டல்லோ போல.
சமகாலத்தின் சிந்தனை வரட்சியை, அறவீழ்ச்சியை, போலி ஒழுக்கத்தை
சுட்டிக்காட்டுவது எப்போதுமே எழுத்தாளனின் கடமை. உண்மையில்
அது பற்றிய கவலைகளும் ஒவ்வாமைகளுமே அவனை எழுதச்செய்கின்றன. அவ்வாறன்றி
சமகாலத்தின் பொதுமக்களின் உணர்ச்சிகளுடனும் சிந்தனைகளுடனும் தானும் இணைந்திருக்கக்கூடிய
எழுத்தாளன் எதையும் உருப்படியாக எழுத முடியாது.
ஆகவேதான் சமூக- பண்பாட்டு விமர்சனம்
இல்லாமல் நவீனஇலக்கியம் இருக்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. அந்த விமர்சனம்
சமகாலச்சமூகத்தை தொந்தரவு செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பிரச்சினைகளுக்கு
உள்ளாக்கும். அதற்கான எதிர்வினையை சமூகம் அளிக்கும். வசைபாடும், நகையாடும். ஆனால் அதனூடாகவே
எழுத்தாளன் சமூகத்திடம் பேசுகிறான். ஆகவே என்னைப்பொறுத்தவரை
இது என் பணி. இதை நான் செய்யாமலிருக்கமுடியாது.
எழுத்தாளர்கள் சர்ச்சையை உருவாக்கக் கூடாது, சமகாலத்தை
விமர்சிக்கக்கூடாது, கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர்கள்
இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத ஒருவகை பாமரர்கள். அவர்களின்
எண்ணிக்கைக்கு இங்கே குறைவே இல்லை. அவர்கள் மனதில்
எழுத்தாளனுக்கு இடமே இல்லை. அவன் அவர்கள் நோக்கில் ஒருவகை கேளிக்கையாளன் மட்டுமே. ஆகவே தங்கள்
சிந்தனைத்தேக்கத்தைச் சுட்டிக்காட்டுகையில் திகைப்பும் எரிச்சலும் கொள்கிறார்கள்.
சென்ற இருதினங்களில் எனக்கு ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும்
என்ற உபதேசங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்தன. இக்கட்டுரைகளுக்கான
பின்னூட்டங்களைப்பார்த்தால் அதிலுள்ள எரிச்சலும் வசையும் பொதுவாகவே எழுத்தாளர் என்ற
ஆளுமைக்கே எதிரானவை என்பதை எவரும் காணமுடியும். எழுத்தாளர்கள்
சமூகத்தின் நல்லெண்ணத்தை ஈட்டவேண்டியவர்கள் என்ற தோரணையே நம்மவர்களிடம் எப்போதும் உள்ளது.
இன்னொரு குரல் இது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது என்பது. இதைச்சொல்பவர்களை
கூர்ந்து கவனியுங்கள், இவர்களுக்கும் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது. இலக்கியம்
ஒருவகையான ‘ஷோ பிஸினஸ்’ என்றுதான் அறிந்து
வைத்திருக்கிறார்கள். விளம்பரம் என்பது அங்கே இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும்
வார்த்தை. இவர்கள் உள்ளூர ஏங்குவது, இவர்கள்
செயல்படுவது அந்த விளம்பரத்துக்காக மட்டுமே.
தமிழக இலக்கியச் சூழலில் அத்தகைய ‘விளம்பரத்தின்’ பலன் என
ஏதுமில்லை. அதனால் பணம் என ஏதும் கிடைக்கப்போவதில்லை. புகழுக்குப்பதில்
வசைகளும் எக்காளங்களும் மிரட்டல்களுமே கிடைக்கும். அது இவர்களுக்கும்
நன்றாகவே தெரியும், ஆகவேதான் இவர்கள் ஒருபோதும் இந்த வழியைத் தேர்வுசெய்வதில்லை. சமகாலச்
சமூகத்தின் பொதுமனநிலைகளுக்கு எதிராக நின்று பேசுவதற்கு அதற்கான திடசிந்தனையும் ஆன்மவல்லமையும்
தேவை.
அப்படி ஓர் ஆளுமையை தனக்கென உருவாக்கிக் கொண்டவர்களை மட்டுமே
அச்சமூகம் கவனிக்கும். அவன் கருத்து மட்டுமே விவாதங்களை எழுப்பும் உண்மையில் இந்த
எதிர்வினைகள் எல்லாமே அதைச் சொல்பவனின் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பின் மறுபக்கங்கள்தான். அவன் குரல்
கவனிக்கப்படுகிறதென்றே அதற்குப்பொருள். இந்தக் கவனத்தை
வெறும் விளம்பரம் என்பவர்கள் கவனத்தைக் கவர்வதற்கான என்னென்ன அந்தர்பல்டிகளெல்லாம்
அடிக்கிறார்கள் என்று கவனியுங்கள், அதை இச்சமூகம் எப்படி
சாதாரணமாகக் கடந்து செல்கிறதென்பதை அறிவீர்கள்.
எனக்கு ஏதாவது இச்சமூகத்திடம் சொல்வதற்கிருப்பது வரை, நான் இச்சமூகத்தை
கவனிக்கச்செய்து நான் சொல்வதை முன்வைத்தபடியேதான் இருப்பேன். அது விவாதங்களை
உருவாக்கியபடியேதான் இருக்கும். எந்த எதிர்வினையும் இல்லாமல்போவதே எழுத்தாளனின்
தோல்வி.
இது விளம்பரத்துக்கான உத்தி என்றால் தல்ஸ்தோய் சமகால ஒழுக்கச்சூழலை
கடுமையாக விமர்சித்ததும் இருட்டின் வெற்றி போன்ற நாடகத்தை எழுதியதும் அதன் எதிர்வினைகளும்
எல்லாமே வெறும் விளம்பரங்களே. டி.எச்.லாரன்ஸின் கட்டுரைகளும் விவாதங்களும் வெறும் பரபரப்புதேடல்களே.உலக இலக்கியத்தின்
அத்தனை முன்னோடிகளும் விளம்பரத்துக்கான ‘ஸ்டண்ட்’ அடித்தவர்களே.
நான் முன்னோடிகளாகக் கொள்ளும் அத்தனை சிந்தனையாளர்களும் இதைசெய்தவர்களே. செய்துகொண்டிருப்பவர்களே.இப்போதுகூட
பால் சகரியா கேரளச் சமூகத்தில் உருவாக்கும் நேரடியான பாதிப்பை என்னால் உருவாக்கமுடியவில்லை
என்றே உணர்கிறேன்.
இலக்கியவரலாற்றை அறியாத, இலக்கியவாதியின்
பணியை உணரமுடியாத பாமரர்களின் பிதற்றலை நான் கணக்கில் கொள்ளவில்லை. இலக்கியத்திற்குள்
நுழையவிருக்கும் வாசகர்கள், எழுதப்போகும் படைப்பாளிகளுக்காகவே இதை எழுதுகிறேன்.நீங்கள்
காண்பது இணையமெங்கும் அச்சு ஊடகமெங்கும் விரவிக்கிடக்கும் வசைகளை. ஆனால் என்றும்
எப்போதும் நல்ல இலக்கியவாதி அவ்வாறான எதிர்வினைகள் வழியாகவேதான் செயல்பட்டான் என்பதை
நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் அந்த வசைகளுக்காக முயலுங்கள்.
நாமிருக்கும் இடம்…
எதிர்வினைகள் நான் எதிர்பார்த்தவகையிலேயே இருந்தன என்றேன். நான் இந்தியாவில்
தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் உருவாகவே
இல்லை என்று சொல்லிவருவதற்கான அழுத்தமான ஆதாரங்கள் இந்த எதிர்வினைகள். இனி எவருமே
அப்படி இல்லை என என்னிடம் விவாதிக்கமுடியாது
ஆனால் இது எனக்கு அச்சத்தையும் ஆழமான வருத்ததையுமே அளிக்கிறது. மத்தியகாலகட்டத்தில்
மதவாதிகளை எதிர்கொண்ட பகுத்தறிவாளனின் தனிமையை உணரமுடிகிறது என்னால்.
நாம் இன்னும் பதினெட்டாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த
சிந்தனைமாற்றங்களைக்கூட அடையாத சமூகமாகவே உள்ளோம். இன்னும்
கருத்துக்களை புறவயமாக யோசிக்க, தர்க்கபூர்வமாக விவாதிக்க, நிதானமாக
எல்லா தரப்புக்களையும் பரிசீலிக்க நாம் பழகவில்லை. இன்னும்
சிந்தனையில் தனிமனிதனுக்குள்ள உரிமையை நாம் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு
கருத்தும் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படும் சூழலை உருவாக்காமல் சிந்தனையை வளர்க்க முடியாது
என்று நாம் கற்கவில்லை. ஆம், நாம் பகுத்தறிவை நோக்கிய முதல் காலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.
அதை நமக்கு நாமே பொட்டிலறைந்தாற்போல தெளிவுபடுத்தவே அக்கட்டுரை
எழுதப்பட்டது.இப்போது அது தெளிவாகிவிட்டது. நாம் இங்கிருந்துதான்
மேலே சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.