செவ்வாய், 23 ஜூன், 2015

சாப்பாடு - பெரும்பாடு

உயிர்வாழ அத்தியாவசியத் தேவையான உணவை யாரும் இங்கே வெறுப்பதில்லை. ஆனாலும் விவசாயியை நாம் மனதளவில் உயர்வாக நினைத்தாலும், சமூக அந்தஸ்து என்று வரும்போது குறைத்தே மதிப்பிடுகிறோம். காரணம் சாதாரண விவசாயியின் தோற்றமும் அவர் சம்பாதனையும் மற்றவர்களைக் காட்டிலும் தாழ்ந்தே இருக்கிறது.

வேலை சார்ந்து உருவான இந்திய சமூகக் கட்டமைப்பை "புதுமை" பேசுகிறேன் என்று சொல்லி அதன் அடிவேரில் அமிலத்தை ஊற்றியவர்கள், இறந்தபின்னும், தங்கள் வாரிசாக சில அமில ஆலைகளை உருவாக்கிவிட்டு சென்றுவிட்டனர். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து எனும் இவைதான் அடிப்படை தொழில்களாக பாவிக்கப்பட்டன. அதன் பொருட்டே சமூக கட்டமைப்பும் உருவானது.

இன்று எல்லோருக்கும் கல்வி என்கிற பெயரில் குப்பைத் தகவல்களை மட்டும் குழந்தைகளின் மூளையில் நிரப்பும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. வாழ்க்கைக்கல்வி என்றால் என்ன, நடைமுறை அறிவு என்றால் என்ன என்று சிறு துளி அளவு கூட மாணவர்களுக்கு..., ஏன், இன்று பெருநிறுவனங்களில் வேலை செய்து பெரிதாக பணம் பண்ணுகிறோம் என்று பீத்திக்கொள்பவர்களுக்குக் கூடத்தெரியாது.

சம்பாதிக்க மட்டுமே அறிவு இங்கே தரப்படுகிறது. அது பாதி அறிவுதான்.செலவு செய்வது எப்படி? எந்தப் பொருளை எந்த இடத்தில, எந்த நேரத்தில் வாங்கவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இன்றி, சேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாத மலட்டு சமுதாயத்தை உருவாக்கிய கல்வியைத்தான் இன்று எல்லோரும் நாடிச்சென்று, நடவு செய்த பூமியை விற்று, ஏமாந்து, தெருவில் பிச்சை எடுக்கும் அளவிற்கு வந்து விட்டோம்.
எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதை விடுத்து, எதையெல்லாம் சாப்பிடவேண்டுமோ அதை விடுத்து, எதையெல்லாம் உடுத்த வேண்டுமோ அதையும் விடுத்து அடையாளங்களை, அறிவை, சொத்தை, மானத்தை எல்லாவற்றையும் இழந்த சமூகமாக இருக்கிறோம். ஆனாலும் சிறப்பான வாழ்நிலையை பெற்றுள்ளோம் என்கிற மாயையிலே வாழ்கிறோமே, இதைவிடக் கேவலம் எந்த நாட்டில் நடந்துவிடக்கூடும்??

குண்டடி பட்டு தினம் தினம் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பலியாவதைக் காட்டிலும் இழிநிலையில் இருக்கிறோம். எதை எடுத்தாலும் கலப்படம். வாங்கும் எல்லா  பொருட்களும் இரண்டாம் அல்லது மூன்றாம் தரம், அல்லது தரமே இல்லை. அதைத் தட்டிக்கேட்கவும் யாரோ ஒரு முகம் தெரியாத ஹீரோ வரவேண்டி இருக்கிறது. ஏனெனில் முகம் தெரிந்த ஹீரோக்கள் துடைப்பதற்கு காகிதம் இல்லாமல் தவிக்கும் நிலையில், அவர்கள் நிஜ ஹீரோக்களாக ஆவது எதிர்பார்க்க முடியாது.

இத்தனைத் துயரத்திலும் நண்பர் திருமூர்த்தி அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிடுவது சிறந்த உதாரணமாகும். விவசாயத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு செய்து, அதை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் எதுவும் புதுமை இல்லையென்றாலும், அவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளையும் மறுமொழிகளையும், அவருக்கு ஊக்கம் கொடுக்கும் நபர்களையும் பார்க்கும்போது, "தம்மால் செய்யாமுடியாமல் பொருளாதார வலைப்பின்னலில் சிக்கி தவிக்கிரோமே!" என்று ஆதங்கப்படுவதாகவே தோன்றுகிறது.

நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமில்லாத கூக்குரல்கள் கேட்பதாகவும் தோன்றுகிறது. மாற்றம் வேண்டுவோர்... சும்மா இருந்துவிட்டால் நடக்குமா? என்ன செய்ய வேண்டும்? உங்கள் பங்கு என்ன? தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்...

நன்றி
உதயகுமார் ஸ்ரீ.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மைகள்...

முகநூல் இணைப்பிற்கு நன்றி...

Udayakumar Sree சொன்னது…

கசக்குது தலைவரே..

பெயரில்லா சொன்னது…

முகநூல் இணைப்புகளை வழங்கியமைக்கு நன்றி. அருமையான பதிவு.