திங்கள், 5 அக்டோபர், 2015

பிள்ளையா? தொல்லையா?

இளைஞர்களுக்கு வணக்கம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பாரமாக சித்தரிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும், இளம் தம்பதிகளுக்கும் இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

கடந்த சில வருடங்களாக நான் சந்தித்த மாணவர்களையும், என்னிடம் நேரடியாக பயிற்சி பெற்ற மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்கள் பேசியவற்றையும் கணக்கில் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக அமைய மூன்று அடிப்படை தேவைகள் இருக்கிறது. உணவு, உடை, வீடு. இவற்றை ஏற்கெனெவே போதுமான அளவு வைத்திருப்பவர்கள் கல்வியை பெரிய தேவையாக கொண்டிருப்பதில்லை. உணவு, உடை, வீடு இவற்றை வாங்கி நமக்கான வாழ்வை தொடங்க நமக்கு பொருள் தேவைப்படுகிறது. அதாவது பணம் தேவைப்படுகிறது.
உழைத்தால் சம்பாதிக்கலாம் என்ற நிலை எப்போதுமே உண்டு. எங்கு உழைக்கவேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் முடிவு. பிறரிடம் வேலை செய்ய வேண்டுமா? அல்லது நாமே ஒரு தொழில் துவங்கி வேலை செய்ய வேண்டுமா? வேலையே செய்யாமல் சம்பாதிக்கலாம் என்ற விவாதுக்குள் இப்போது செல்ல வேண்டாம்.

பிறரிடம் வேலை செய்யவோ, சுய தொழில் துவங்கவோ நமக்கு “அறிவு” தேவைப்படுகிறது. அங்கேதான் “கல்வி”யின் முக்கியத்துவம் இருக்கிறது. கல்வி என்பது அறிவைப் பெறுவதற்குதான். வேறு எதற்கும் இல்லை. பன்னிரண்டாம் வகுப்புவரை நாம் கற்ற கல்வி, நம்முடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாகவே இருக்கிறது. இருந்தாலும் சமுதாய அந்தஸ்து என்ற ஒன்று “வசதி” என்பதை அடையவேண்டும் என்று வற்புறுத்துகிறது. அதன் பின்னால் சென்றுதான் இன்று பலரும் நிம்மதியை இழந்து நிற்கின்றனர்.

அதாவது மேற்படிப்பு என்று துவங்கி, பணம் ஈட்டும் படிப்பு என்று தேடி, அதன் பின்னாலேயே அலைந்து ஒருவாறாக முன்னே செல்பவர்கள் சென்றுவிட, எப்போதும் போல் சிலர்மட்டும் பின்னால் தள்ளப்பட்டு நிற்கிறார்கள். இந்த முன்னால், பின்னால் என்கிற விளையாட்டு “மதிப்பெண்” என்ற ஒன்றை வைத்து விளையாடப்படுகிறது. “பங்குச் சந்தையில்” வெறும் எண்களை வைத்து விளையாடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
சரி, விளையாட்டில் இறங்கிவிட்ட பின்னர், விளையாடியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. வெற்றி பெரும் வகையில் உலக அளவில் எப்படி எல்லா போட்டிகளையும் வெல்வது என்கிற வித்தைகள் கற்றுக்கொண்டால், நிச்சயம் ஜெயிக்க முடியும் என்பதும் உண்மைதான்.

மாறிவரும் உலக சூழலுக்கேற்ப நமது பண்டைய கல்வி முறையிலிருந்து இன்று முற்றிலும் வேறுபட்ட முறையில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறோம். அதன் முக்கிய நோக்கம் உலகளாவிய வகையில் வேலைவாய்ப்பை பெற்று நம்முடைய பொருளாதார தேவையை, பூர்த்தி செய்கிறோம்.

மன்னராட்சி முறையில் இருந்து மக்களாட்சி முறைக்கு வந்தபிறகு, உலக வர்த்தகம் விரிவடைந்த பிறகு, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு மேம்பட்ட பிறகு, உள்ளூரில் பெட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொள்வேன் என்கிற வாதம் “தோல்வியின்” அடையாளமாகி விடுகிறது.
உலக வர்த்தகம் என்பது உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் “உற்பத்தியாளர்கள்” ஒரே நாட்டில் மட்டும் நில்லாமல் மற்ற நாடுகளிலும் உற்பத்தியை பெருக்கி விநியோகம் செய்வதுதான். விவசாயம் கூட, நம்மால் வேறு நாட்டிற்கு சென்று செய்ய முடியும். எந்த நாட்டில் இயற்கை வளம், மண் வளம், மற்றும் நீர் வளம் இருக்கிறதோ, அங்கே சென்று நிலங்களை வாங்கி நம்முடைய விவசாய அறிவை உபயோகித்து வேளாண்மை செய்ய முடியும். இப்படி யாரும் இதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் இது நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

சரி விஷயத்துக்கு வருவோம். என்ன சொல்ல வருகிறேன் என்றால், கல்வி-பணம் என்று நேர்கோட்டில் பயணத்தை வைத்து பெற்றோர்களும் பிள்ளைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். காரணம், மேலே குறிப்பிட்டது போல, நம்முடைய கல்வி முறை மாறிவிட்ட பிறகு அதை முழுதாக உள்வாங்கி, கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் வகையில் பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. பாடங்கள் எளிதாகவும் உலக அளவில் போட்டி போடக்கூடிய அளவில் இருந்தாலும், அதை மாணவர்களிடத்தில் சேர்க்கக்கூடிய திறன் வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைந்து விட்டது. தலைமுறைகளை கட்டிக்காத்த பெருமை ஆசிரியர்களையே சேரும்.

வாழ்க்கைக்கு கல்வி முக்கியம், கல்வியை போதிக்கும் ஆசிரியரும் அதே முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஆனால், இன்று ஆசிரியர்கள் மதிப்பை இழந்ததற்கு காரணம், தகுதி இல்லாத ஆசிரியர்களை வைத்திருக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும். அதைத் தாண்டி, அறிவு இருந்தாலும், ஆசிரியருக்கு இருக்கவேண்டிய ஒழுக்க நெறிகளை, அவர்கள் பின்பற்றாமல் இருப்பதும்தான்.

இன்றைய முக்கியத் தேவை நல்ல அரசியல்வாதிகளோ, நல்ல அரசுப் பணியாளர்களோ இல்லை. ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்த ஆசிரியர்கள்தான் இன்றைய தலையாய தேவை. மண்ணை மலடாக்கிவிட்டு பயிர் செய்தால், எப்படி விளையும்? தகுதியான ஆசிரியர்கள் இல்லாமல், கல்வித் திட்டங்களையும், புத்தகங்களையும் பள்ளிகளையும் மட்டும் வைத்திருந்து என்ன புண்ணியம்? சிந்திப்போம் இளைஞர்களே.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: